×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம புறங்களில் வளர்ப்பு மீன் விற்பனை படுஜோர் வியாபாரிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை, ஜூன் 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் உள்ள பொதுமக்கள் மீன்கள் வேண்டுமெனில் அவர்கள் வசிக்கும் கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு சென்றுதான் மீன்கள் வாங்கி வரவேண்டும். இந்த நகரங்களில் கடல் பகுதியில் மீனவர்கள் பிடித்து வரும் வகை வகையான மீன்கள் அதிக அளவில் கிடைக்கும்.

ஆனால் உயிர் மீன்கள் கிடைப்பதில்லை. ஆனால் கிராமங்களில் உள்ளவர்கள் பலவகை மீன்கள் நகர் பகுதியில் கிடைத்தாலும் உயிர் மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஏனென்றால் கிராமத்தில் உள்ளவர்கள் ஏரி குளங்கள், கிணறுகளில் மீன்கள் வளர்த்து தேவை ஏற்படும்போது வலை மற்றும் தூண்டில்கள் உதவியுடன் மீன்கள் பிடித்து சாப்பிட்டு வந்தனர்.

தற்போது வறட்சியின் காரணமாக பல ஏரி குளங்கள், கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் கிராமங்களில் வளர்ப்பு மீன்கள் கிடைப்பதில் வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் பல கிராமங்களில் மீன் வளர்க்க தேவையான சிறிய அளவிலான குளங்கள் வெட்டி அதில் போர்வெல் அமைத்து தண்ணீர் விட்டு அதில் மீன்கள் வளர்த்து இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் கெண்டை, விரால் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களுக்கு கொண்டு வரப்படும் மீன்கள் ஐஸ்பெட்டியில் வைத்து கொண்டு வராமல் உயிர் மீனாக கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சமின்றி மீன்களை வாங்குகின்றனர். இப்படி பல கிராமங்களில் மீன்களின் தேவை அதிகரித்து விற்பனை அதிகரித்துள்ளதால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிராமம் கிராமமாக விற்பனை செய்யும் மீன் வியாபாரிகள் கூறியதாவது:
கிராமத்தில் உள்ளவர்கள் நகர் புறத்திற்கு சென்று மீன்கள் வாங்கினாலும் அவர்களுக்கு அந்த மீன்கள் பிடிப்பத்தில்லை. ஏனென்றால் நகர் புறத்தில் ஐஸ் மீன் தான் கிடைக்கிறது. இது அவர்களுக்கு பிடிப்பத்தில்லை. கிராமத்தில் உள்ளவர்கள் உயிர் மீன்கள் மட்டுமே வாங்க விரும்புகின்றனர். இதனால் இதனை பயன்படுத்தி தினசரி மீன் வளர்ப்போர்களிடம் தேவையான மீன்களை பிடித்து உயிராக கொண்டு வந்து கிராமத்தில் மக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

வளர்ப்பு கெண்டை மீன் கிலோ ரூ.250க்கும் விரால் மீன் கிலோ ரூ.550க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் இந்த விலையை விட சற்று அதிகரிக்கும். சற்று குறையும். எது எப்படி இருந்தாலும் விற்பனை குறையாமல் நடந்து வருகிறது. குறிப்பாக ஞாயிறு, சனிக்கிழமைகளில் பள்ளி கல்லூரி விடுமுறை என்பதால் எங்களை போனில் தொடர்பு கொண்டு மீன்கள் கேட்டு வாங்கி சாப்பிடுகின்றனர்.

இவர்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே நாங்கள் கொள்முதல் செய்வோம். தொடர்ந்து மீன் வாங்குவோர்களிடம் நாங்கள் மீன்களை கடனுக்கும் விற்பனை செய்வோம். சில இடங்களில் உயிர் மீன் கிடைக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் கேட்டுவிட்டால் எங்கு கிடைத்தாலும் அதனை வாங்கி வந்து கொடுத்து வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வோம் என்றனர்.

Tags : merchants ,areas ,Pudukkottai district ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...