மணமேல்குடியில் செல்போன் திருடியவன் சிக்கினான்

அறந்தாங்கி, ஜூன் 21: மணமேல்குடியில் செல் திருடியவன் சிசிடிவி கேமரா உதவியுடன் அறந்தாங்கியில் பிடிபட்டான். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் நேற்று காலை பச்சை கலர் டி சர்ட்டுடன் நுழைந்த ஒரு இளைஞன் அந்த கடையில் இருந்த ஒரு செல்போனை திருடி தனது லுங்கிக்குள் போட்டுக் கொண்டு சென்றுவிட்டான். கடையில் செல்போன் திருடப்பட்டதை அறிந்த கடையின் உரிமையாளர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்த்து, அறந்தாங்கி பகுதி செல்போன் விற்பனையாளர்கள் சங்க வாட்ச் அப் குழுவில் பதிவு செய்தார்.

இந்தநிலையில் செல்போனை திருடியவர் அறந்தாங்கியில் உள்ள நத்தர் என்பவருக்கு சொந்தமான கடையில் செல்போன் லாக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், நத்தர் மற்றும் செல்போன் விற்பனையாளர் சங்க பொருளாளர் பிரபு ஆகியோர் வாட்ஸ்அப் பதிவை பார்த்தபோது, மணமேல்குடியில் செல்போன் திருடிய வாலிபர் அவர்தான் என்பதும், திருடப்பட்ட செல்போன் அதுதான் என்பதும் தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது, அந்த வாலிபர் மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கட்டுமாவடி கணேசபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உடனே அவர் சம்பவம் நடந்த மணமேல்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். செல்போன் திருடியவர் சிசிடிவி கேமரா பதிவு மூலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>