×

பார்சன்ஸ்வேலி அணை நீர்மட்டம் சரிவு

ஊட்டி, ஜூன் 21: ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இதுதவிர மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கென ஏற்கனவே பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மூன்றாவது குடிநீர் திட்டத்திற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் பார்சன்ஸ்வேலி அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே மாத கோடை காலத்தில் அவ்வப்போது கனமழை பெய்தது. இதன் காரணமாக பார்சன்ஸ்வேலி அணையில் நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்தது. இதனால் ஊட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.  இந்நிலையில் தென்மேற்கு பருவமழை போக்குகாட்டி வரும் நிலையில், கடுமையான வெயில் நிலவுகிறது. மேலும் குடிநீர் தேவைக்காகவும், மின்தேவைக்காகவும் அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்படுவதால் அணையில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில், தற்போது 19 அடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சூழலே இல்லாத நிலையில், மழை பொய்க்கும் பட்சத்தில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

Tags : Parsons Valley Dam ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...