தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உடல் மீட்பு

கூடலூர், ஜூன் 21: கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்த சிறுத்தை எப்படி இறந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரை அடுத்துள்ள ஆணைசெத்த கொள்ளை பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றனர். அப்போது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தையை உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து வந்த கால்நடை மருத்துவர் பரத்ஜோதி குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதேபகுதியில் எரியூட்டினர்.

 இறந்தது சிறுத்தைக்கு 5 முதல் 8 வயது இருக்கும் எனவும், அது ஆண் சிறுத்தை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிறுத்தை இருந்து 5 நாட்களுக்கும் மேலாக ஆகி இருக்கலாம் என்றும் உடலில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சிறுத்தையின் முக்கிய உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு பின்னரே சிறுத்தை இறப்புக்கு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: