×

மாத தவணையில் வீட்டுமனை கிரையம் செய்து தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

ஈரோடு, ஜூன் 21:மாததவணை செலுத்தினால் வீட்டுமனை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (53). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முத்துச்சாமி மற்றும் இவரது நண்பர் ராஜமாணிக்கம் ஆகியோர் பங்குதாரர்களாக இணைந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பட்லூர் நால்ரோட்டில்  கந்தன் நகர் என்ற பெயரில் வீட்டுமனை தவணை திட்டம் துவங்கினர். இதே பெயரில் நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் கோட்டை மேடு ஆனங்கூர் ரோட்டில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் மாத தவணை செலுத்தினால் வீட்டுமனை கிரையம் செய்து தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை திட்டத்தில் சேர்ந்தனர். மாத தவணை முழுவதும் செலுத்தியும் இதுவரை வீட்டுமனை கிரையம் செய்து தரவில்லை. இதனால், சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி நடராஜா நகரை சேர்ந்த அம்மாசை (45) என்பவர் கடந்த மாதம் 23ம் தேதி ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமுவிடம் புகார் அளித்தார். புகார் மீது இன்ஸ்பெக்டர் கோபிநாத் விசாரணை நடத்தியதில்,  கந்தன் நகர் என்ற பெயரில் அம்மாசை மட்டும் அல்லாமல் 50க்கும் மேற்பட்டோரிடம் மாத தவணைகளில் பணம் முதலீடு பெற்று ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக முத்துச்சாமியை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை