×

சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4 மணிக்கே மருத்துவர்கள் எஸ்கேப்

சிவகிரி, ஜூன் 21:  சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4 மணிக்கே மருத்துவர்கள் பணி முடிந்து சென்றுவிடுவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிவகிரி, வாழைத்தோட்டம், கந்தசாமிபாளையம், தாமரைப்பாளையம், ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு மகப்பேறு, எச்ஐவி ஆலோசனை மையம், சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவ பிரிவு, கண் மருத்துவ பிரிவு, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் 10க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது. இங்கு கடந்த சில மாதமாக ரத்த பரிசோதனை வாரந்தோறும் வெள்ளிகிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை  மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளும் முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இதுகுறித்து மருத்துவ ஊழியர்களிடம் கேட்டால் சர்க்கரை பரிசோதனை செய்ய வரும் டெக்னிசீயன் வெளியூரிலிருந்து வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டுமே வருகிறார். அவர் எச்ஐவி கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் பணிக்கு சேர்ந்ததால் அவர் வரும் நேரத்தை மாற்ற முடியவில்லை என கூறுகின்றனர்.  இதுதவிர, காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது மாலை 4 மணியுடன் பணியை முடித்துவிடுகின்றனர்.  அதற்கு மேல் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை இங்கு பணிபுரியும் சில மருத்துவர்கள் வெளியே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதே இதற்கு காரணம் என்கின்றனர். இதனால், மாலை நேரங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டெக்னீசியனை நியமிக்க வேண்டும். பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Doctors ,Sivagiri Government Primary Health Center ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை