×

டிரான்ஸ்பார்மர் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சேதுபாவாசத்திரம், ஜூன் 21: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் 15 நாட்களுக்க முன் பழுதடைந்தது. இதனால் மின்மோட்டார் இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தினர். ஆனால் இதுவரை டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லை.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மின்வாரிய அதிகாரி என பலரிடமும் முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமத்துவபுரம் நால்ரோடு அருகில் பேராவூரணி - ஊமத்தநாடு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மின்வாரிய அதிகாரிகள், பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றி உடனடியாக மாற்றப்பட்டு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Transformer ,
× RELATED தனியார் டிரான்ஸ்பார்மர் கம்பெனியில்...