உய்யகொண்டான் கால்வாய்

தஞ்சை, ஜூன் 21: உய்யகொண்டான் கால்வாய், கட்டளைமேட்டு வாய்க்கால், ஆனந்த காவிரியை உடனடியாக தூர்வாரி எளிதில் தண்ணீர் செல்ல வழிசெய்ய வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ சுரேஷ் தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். தோழகிரிபட்டி கோவிந்தராஜ் பேசும்போது, கஜா புயல் வீசியதில் கரும்புகள் அடியோடு சாய்ந்து பலத்த சேதம் ஏற்படுத்தியது.

இதற்கு உரிய நிவாரணம் பலருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க வேண்டும். கரும்புக்கான ஆதார விலையான டன்னுக்கு ரூ.2,612 கடந்த ஏப்ரல் 15ம் தேதி வரையிலான கரும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வழங்காமல் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக இத்தொகையை வழங்க வேண்டும். 2016 முதல் நிலுவையில் உள்ள ரூ.34 கோடி கரும்புக்கான நிலுவை தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

கள்ளப்பெரம்பூர் பழநிமாணிக்கம் பேசும்போது, வசதியானவர்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை, எளியோருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றார். அம்மையகரம் ரவிச்சந்தர் பேசும்போது, தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதத்துக்கு பிறகு தற்போது நடப்பதை வரவேற்கிறேன்.

ஊறுகாய் தயாரிப்பாளர்கள், சோப்பு தயாரிப்பாளர்கள் வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்கின்றனர். ஆனால் நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயி நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க முடியவில்லை. அதே சமயம் உரக்கடைகளில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களின் விலை கடைக்கு கடை வித்தியாசமாக உள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேளாண்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழ் இறங்கிவிட்டது. உப்புநீர் உட்புகுந்து பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்பு உண்டு. காவிரி நதிநீர் ஆணையம் தண்ணீரை திறந்து விடுமாறு வெறும் ஆணை போடும் ஆணையமாக உள்ளது. ஆணையை செயல்படுத்தும் ஆணையகமாக இருக்க விரும்புகிறோம் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பேசும்போது, உய்யகொண்டான் கால்வாய், கட்டளைமேட்டு வாய்க்கால், ஆனந்த காவிரியை உடனடியாக தூர்வாரி எளிதில் தண்ணீர் செல்ல வழிசெய்ய வேண்டும். செங்கிப்பட்டியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இதை சாலையோரத்தில் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Tags : Uyyakkondan Canal ,