×

முத்துப்பேட்டை கற்பகநாதர் குளத்தில் சொந்த செலவு கிணற்றை தூர்வாரி குடிநீர் வசதி: ஊராட்சி செயலருக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, ஜூன் 21: முத்துப்பேட்டை கற்பகநாதர் குளத்தில் தனது சொந்த ெசலவில் கிணற்றை தூர்வாரி குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்த ஊராட்சி செயலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். முத்துப்பேட்டை முழுவதிலும் குடிநீர் தட்டுப்பாடு பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிகபட்சமாக முத்துப்பேட்டை அடுத்த உப்பூர், தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு போன்ற பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை பகுதியில் மின்கம்பங்கள், மின்கம்பி இணைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்தது. அவற்றில் பல பகுதியில் பெரும்பாலான மின் இணைப்புகள் இன்றைய வரையிலும் சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனால் மின்விநியோகம் அவ்வப்போது தடைபடுவதும் மக்கள் அவதிக்குள்ளாவதும் தொடர்கிறது.

இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் விநியோகமும் குளறுபடியோடு உள்ளது. குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் அதிகம் தட்டுப்பாடு உள்ள முத்துப்பேட்டை ஒன்றியம் தொண்டியக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி, முனாங்காடு பகுதிகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோக பிரச்னை பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளது.

இதனால் இப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு தற்போது அப்பகுதி ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் விளாங்காடு ஊராட்சி செயலர் விஜயபாலனிடம் அப்பகுதியில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் கிணற்றை தூர் வாரினால் தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்து கோரிக்கை வைத்தனர். இதனால் அதிரடியாக களம் இறங்கிய ஊராட்சி செயலர் விஜயபாலன் முத்துப்பேட்டை ஒன்றிய ஆணையர்கள் பக்கிரிசாமி, கமலராஜன் ஆகியோரிடம் அனுமதி பெற்று ஆர்வத்துடன் தானே முன்னின்று தொழிலாளர்களை வைத்து பாழடைந்துள்ள கிணற்றை தூர்வாரினார்.

முதலில் கிடைத்த அசுத்தமான நீரை மோட்டார் வைத்து இறைத்தனர். பின்னர் ஒருவழியாக தூர் வாரிய கிணற்றிலிருந்து உப்பு இல்லாத நல்ல தண்ணீர் பொங்கி வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஊராட்சி செயலர் விஜயபாலன் உடன் கிணறிலிருந்து குழாய்கள் அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் இன்றி தவித்த தொண்டியக்காடு கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீரின்றி தவித்து வந்த புதுக்குடி, முனாங்காடு கிராம மக்களுக்கு விடிவுகாலம் பிறந்து தற்போது கடும் வறட்சியிலும் குடிநீர் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த தொண்டியக்காடு, புதுக்குடி, முனாங்காடு கிராம மக்கள் ஊராட்சி செயலர் விஜயபாலனை பாராட்டினர்.

Tags : pond ,Muthupettai Kargathanathar ,Panchayat Secretary ,
× RELATED கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில்...