மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர் நாள் கூட்டம்

திருவாரூர், ஜூன் 21: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் வகையில் அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அலுவலக நிர்வாக காரணங்கள் கருதி இந்த கூட்டம் வரும் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டு நடைபெறுகிறது.

இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதுடன் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.  

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ளும் போது தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல்களை தவறாது கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கு முன் ஏதேனும் விண்ணப்பம் அளித்து இருந்தால் அது தொடர்புடைய மனுக்கள் கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 25ம் தேதி நடக்கிறது

Tags : Transformers ,Special Grievances Day Meeting ,
× RELATED டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால் 2...