×

அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் வைக்க அனுமதி கேட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் தர்ணா

திருச்சி, ஜூன் 21: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் பகுதி தரைக்கடை வியாபாரிகள் அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் வைக்க அனுமதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். திருச்சி என்எஸ்பி ரோடு, தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான தரைக்கடைகள் இருந்தன. கடந்த சனிக்கிழமை இந்த கடைகள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி அகற்றப்பட்டன. இந்த பகுதியில் எப்போதும் கடைகள் அகற்றப்படுவதும், மறுநாள் மீண்டும் கடைகளுக்கு அனுமதி வழங்குவதும் நடைபெறும்.

ஆனால் இந்த முறை கடைகளை மீண்டும் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. மொத்தம் 113 தரைக்கடைகள் அகற்றப்பட்டன. காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் கடை போடுவதற்கு அனுமதி மறுத்தனர். மீண்டும் கடைகள் அமைக்க அனுமதி கேட்டு இந்த கடைகளின் வியாபாரிகள் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஏஐடியூசி, மகஇக, மக்கள் அதிகாரம், மனிதநேய வர்த்தக சங்கத்தினர் 200 பேர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியூசி மாநில துணை செயலாளர் சுரேஷ், மனிதநேய வர்த்தக நலச்சங்கம் மாவட்ட தலைவர் கபீர்அகமது, ஏஐடியூசி சிவா, சிஐடியூ மணிகண்டன், மகஇக பழனிச்சாமி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். கன்டோன்மென்ட் போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 10க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களை அழைத்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு கணக்கு பிரிவு உதவி ஆணையர் திருஞானத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உதவி ஆணையர் திருஞானம், மேலும் தெப்பகுளம் வளைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடைகள் அமைக்க அனுமதிக்க முடியாது. மேலும் சாலையில் ஆக்கிரமிப்பு ்செய்து கடைகள் அமைக்க நாங்கள் அனுமதி தரமுடியாது. தரைக்கடைகள் மீண்டும் வைப்பது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு தரைக்கடை வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,Trichy Corporation ,shops ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...