சர்வதீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலை மீட்பு

காஞ்சிபுரம், ஜூன் 21: காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், சர்வதீர்த்தகுளம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கொண்ட இந்த குளத்தில், ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் நிறைவு நாளில் தீர்த்தவாரி நடைபெறும். எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளம், தற்போது கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், வெயில் தாக்கத்தால், வெப்பம் தாங்க முடியாமல் அதில் இருந்த மீன்கள் இறந்து மிதந்தன. இந்நிலையில் வறண்ட குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர், நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை கிடந்ததை பார்த்தனர். இதை அறிந்ததும், அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்து–்கு சென்று, சிலையை கைப்ற்றி விசாரித்ததில், பெருமாள் சிலை என தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் கோயிலில் இருந்து கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை ஒன்று காணாமல் போனது. அந்த சிலையை அர்ச்சகர் கார்த்திக் என்பவர் சர்வ தீர்த்த குளத்தில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் திருக்குளத்தில் தேடிய போதும் அந்த சிலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது குளத்தில் இருந்து பெருமாள் சிலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பெருமாள் சிலையை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம்  போலீசார் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED அறிவியல் செயல்திட்டம் போட்டியில்...