×

காஞ்சிபுரத்தில் பரபரப்பு சரமாரியாக தாக்கி கத்தி முனையில் 6 திருநங்கைகள் கடத்தல்

காஞ்சிபுரம், ஜூன் 21: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், கெளுத்தி பேட்டையை சேர்ந்தவர் கணபதி (எ) மகாலட்சுமி. திருநங்கை. ஸ்ரேயா, ஆர்த்தி, சுதா, வசந்தி, வினோதினி, ரெஜினா உள்பட சில திருநங்கைகளை கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்துவெளியேற வேண்டுமென மேற்கண்ட 6 பேர் முடிவு செய்தனர். இதற்காக அவரிடம் பேசியபோது, தலா ₹ 5 லட்சம் கொடுத்தால், விடுவிப்பதாக, திருநங்கை மகாலட்சுமி மிரட்டி வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 16ம் தேதி, மேற்கண்ட 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று, காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர், அவர்களின் உதவியுடன், தங்களுக்கு பாதுகாப்பு கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

புகாரை பெற்று கொண்ட டிஎஸ்பி, திருநங்கை நகரை ஆய்வு செய்து, அங்கு சிசிடிவி கேமரா பொருத்துவதாக தெரிவித்தார். அதன்படி, திருநங்கைகள் நகரில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. நேற்று முன்தினம் திருநங்கைகள் நகருக்கு 6 பேர்சென்றனர். இரவு சுமார் 8 மணியளவில், 3 கார், ஒரு ஆட்டோவில் திருநங்கை மகாலாட்சுயுடன் 30க்கு மேற்பட்டோர் பட்டாக்கத்திகளுடன் திருநங்கை நகருக்குள் புகுந்துனர். இதை பார்த்து திருநங்கைகள் 6 பேர், அலறி அடித்து கொண்டு, அங்குள்ள வத்சலா என்ற திருநங்கையின் வீட்டில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டனர். ஆனாலும் மகாலட்சுமியுடன் சென்ற மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு பதுங்கியிருந்த அனைவரையும் சரமாரியாக தாக்கினர்.மேலும் அந்த வீட்டில் இருந்த பிரிட்ஜ், ஆர்ஓ வாட்டர் ஃபில்டர் உள்பட அனைத்து பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர். பின்னர், அங்கிருந்த 6 திருநங்கைகளை கத்திமுனையில் மிரட்டி கடத்தி சென்றனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட திருநங்கைகளை மீட்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  இதற்கிடையில், திருநங்கைகள் கடத்தியது தொடர்பாக 4 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...