×

அம்மையார்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய் இணைப்புகள் துண்டிப்பு

பள்ளிப்பட்டு, ஜூன் 21: அம்மையார்குப்பத்தில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஊராக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம்  ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில்  பருவமழை  பொய்த்த நிலையில் கோடை வெயில் தாக்கத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிகளுக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில்  25க்கும் மேற்ப்பட்ட ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த அளவில் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் டிராக்டர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் குடிநீர் கேட்டு ஆங்காங்கே தொடர் போராட்டங்களும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் அம்மையார்குப்பத்தில் தெரு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், அனுமதி இன்றி பிரதான பைப் லைன்களிலிருந்து அதிக குடிநீர்  உறிஞ்சி வருவதால் அனைவருக்கும் முறையாக குடிநீர்  வழங்க முடியாத நிலையில் அனைத்து குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதையடுத்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என பொது மக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தெரு குழாய் இணைப்பு துண்டிக்கப்படாத நிலையில்  போலீஸ் பாதுகாப்புடன் ஊராக வளர்ச்சி துறை மண்டல அலுவலர் பாத்திமா, வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவினா, அண்ணாமலை உள்ளிட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குடிநீர் வறட்சியை போக்க ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தாமல் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதால் அம்மையார்குப்பம் பொதுமக்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : homes ,Ammayarkuppam ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை