×

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை ஆக்கிரமிப்பு

திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் தாய்மார்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டும் வகையில் அரசு பஸ் நிலையங்கள், நகராட்சி மற்றும் நகர பஸ் நிலையங்களில் உள்ள வளாகத்தில் தனி அறைகள் ஏற்படுத்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்டது. கழிப்பறை வசதியுடன் ஒரே சமயத்தில் 5 பேர் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டன. கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தற்போது இந்த பாலூட்டும் அறையை ஆக்கிரமித்து வெளியே இனிப்பு கடை வைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் வருமானம் கருதி நகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குழந்தைக்கு பால் புகட்ட மறைவான இடமின்றி தாய்மார்கள் அவதிப்படுகின்றனர்.  எனவே, குழந்தைகளுக்கு இடையூறு இல்லாமல் பாலூட்டும் வகையில் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




Tags : bus station ,Tiruvallur ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்