×

பட்டறைபெரும்புதூரில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டாலும் நெல் மற்றும் கரும்பு பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பட்டறைபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி ஏரிகளிலும் நீர் மட்டம் குறைந்து வற்ற துவங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் கிணறுகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

சிலர் கிணறுகளை தூர்வாரியும், ஆழப்படுத்தும் முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இதனால் இப்பகுதியில் பயிர் செய்துள்ள பல விவசாயிகளின் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் கவலை அடைந்துள்ளனர்.நெற் பயிர்கள் கதிர்கள் வெளிவந்த நிலையில் தண்ணீர் இன்றி கருகுவதால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Paddy Plants ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...