×

தென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பு

தென்தாமரைகுளம், ஜூன் 19:தென்தாமரைகுளம்  அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பை சீரமைக்க அதிகாரிகள் முன்  வரவேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்தாமரைகுளத்தை  அடுத்த சாமிதோப்பு பகுதியில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது.  சுமார் ஒன்றரை கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம்  திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் எந்தவொரு  பராமரிப்பு பணியும் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால்  குடியிருப்பு அடர்ந்த காட்டு பகுதி போல் காணப்படுகிறது. குடியிருப்பை  சுற்றிலும் முட்செடிகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது அந்த  பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதுதவிர இரவு வேளைகளில்  குடியிருப்பு பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால்  காவல் அதிகாரிகளும் இரவு வேளையில் குடியிருப்புக்கு செல்ல முடியாமல்  தவிக்கின்றனர்.  காவலர்களின் வசதிக்காக அரசு சார்பில் கட்டப்பட்ட   இந்த குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் புதர் மண்டி கிடப்பது  காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களையும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே   இந்த காவலர் குடியிருப்பில் உள்ள முட்செடிகள், புதர்களை வெட்டி அகற்றி  முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். இந்த  விஷயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். தொடர்ந்து குடியிருப்புகளை பாராமரிக்க  ஊழியர்களை நியமிக்க  வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Budar Mandi Detention Center ,Thenmalaarikulam ,
× RELATED தென்தாமரைகுளம் அருகே 50 ஏக்கர் விவசாயம் பாதிப்பு