×

நாகர்கோவிலில் கோர விபத்து பைக் மீது குடிநீர் லாரி மோதி கணவன், மனைவி பலி சகோதரரின் திருமணத்துக்கு பொருட்கள் வாங்க வந்த போது பரிதாபம்

நாகர்கோவில், ஜூன் 19: நாகர்கோவிலில்  பைக் மீது குடிநீர் லாரி மோதி நடந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூர் கீழ தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கொத்தனார். இவரது மனைவி மீனாசெல்வி (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.  மணிகண்டனின் உடன் பிறந்த தம்பிக்கு, நாளை திருமணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காகவும், வங்கியில் இருந்து பணம் எடுத்து திருமணத்துக்கான பொருட்கள் வாங்குவதற்காகவும் மணிகண்டனும், அவரது மனைவி மீனாசெல்வியும் ேநற்று காலை பைக்கில் வந்தனர். நாகர்கோவில் ஒழுகினசேரி பிரபல கண் மருத்துவமனை கடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த குடிநீர் லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த மணிகண்டனும், அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணிகண்டன் ஹெல்மெட்  அணிந்திருந்தும் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில்  சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மீனாசெல்வி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் குடிநீர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த மீனாசெல்வியும் நேற்று மாலை உயிரிழந்தார். இதை அறிந்ததும் உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி ைவக்கப்பட்டது. கணவன், மனைவி இருவரும்  விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அவர்களின் குழந்தை பெற்றோரை இழந்து அனாதையாகி உள்ளது.

லாரிகளால் தொடர் விபத்து

நாகர்கோவிலில் பகல் வேளைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கிறது. ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன், காைல வேளையில் வடசேரி பள்ளிவாசல் அருகே பைக் மீது டாரஸ் லாரி மோதி சிறுவன் உயிரிழந்தான். இப்போது ஒழுகினசேரியில் விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக லாரிகள் நகருக்குள் வருவதால் தான் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கின்றன. சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையால் தண்ணீர் லாரிகளின் போக்குவரத்து நகருக்குள் அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தும் உயிர்பலி

நாகர்கோவிலில் தற்போது போலீசார் தீவிர ஹெல்மெட் சோதனை நடத்தி வருகிறார்கள். விபத்தில் உயிர்பலியை குறைக்கும் வகையில் இந்த சோதனை நடக்கிறது. இருப்பினும் நேற்று ெஹல்மெட் அணிந்த நிலையில் தலையில் காயம் ஏற்பட்டு மணிகண்டன் உயிரிழந்துள்ளார்.





Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...