×

ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ பயணம் அடிப்படை வசதிகளும் மோசம்

அருப்புக்கோட்டை, ஜூன் 19: அருப்புக்கோட்டையில் 9வது வார்டில் உள்ள தேவா டெக்ஸ் காலனி பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக 2 கி.மீ தூரம் அலைகின்றனர். எனவே, பகுதி நேர ரேஷன் கடை அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி 9வது வார்டில் தேவா டெக்ஸ் காலனி, கணேஷ் நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முறையான சாலை, குடிநீர், வாறுகால் வசதியில்லை.  வீடுகளுக்கு முன்பு உறை கிணறு அமைத்து கழிவுநீரை தேக்குகின்றனர். இதில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்கிறது.போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் திருட்டுப்பயம் அதிகரித்துள்ளது. தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைத்தொட்டி இல்லாததால் வீடுகளிலேயே குப்பைகள் சேகரமாகிறது. இதில் துர்நாற்றம் வீசி, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

இப்பகுதி பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க, புறவழிச்சாலையை கடந்து 2 கி.மீ தூரம் செல்கின்றனர். மேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதும் இப்பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. தேவா டெக்ஸ் காலனியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9.50 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவறை, பயன்பாட்டிற்கு வராமலே இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், திறந்தவெளி பயன்பாடு அதிகரித்துள்ளது. கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதியில்லை. மினிபவர் பம்பில் தண்ணீர் வருவதில்லை. இப்பகுதி பொதுமக்கள் புழக்கத்திற்கான தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். தாமிரபரணி குடிநீர் வழங்கப்படவில்லை. பகிர்மான குழாய்களும் அமைக்கப்படவில்லை. லாரிகள் மூலம் குடிநீரும் வழங்கப்படுவதில்லை. இப்பகுதி மக்களுக்காக திருச்சுழி ரோட்டில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன பூங்கா இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பூங்கா பராமரிப்பின்றி முட்புதராக உள்ளது. நகராட்சி நிர்வாகம் வீட்டுவரியை கறாராக வசூலிப்பதாக கூறப்படுகிறது. குப்பை அள்ளுவதற்காக, வீடு ஒன்றுக்கு ரூ.135 வசூலிக்கின்றனர். ஆனால், குப்பைத் தொட்டி வைப்பதில்லை.
எனவே, 9வது வார்டில் உள்ள கணேஷ் நகர், தேவா டெக்ஸ் காலனி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : trip ,facilities ,
× RELATED சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!