பூ விவசாயத்தை கைவிட விவசாயிகள் முடிவு

தேவாரம், ஜூன் 19: பூ விவசாயத்திற்கு மழை தேவைப்படும் நிலையில் தொடர்ந்து ஏமாற்றுவதால் விவசாயிகள் தற்போதைக்கு பூ விவசாயத்தை கைவிட முடிவு செய்துள்ளனர். கோம்பை, பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி, கீழசிந்தலைசேரி, டி.சிந்தலைசேரி உள்ளிட்ட ஊர்களில் பூக்கள் விவசாயம் அதிக ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டு வந்தது. மல்லிகை, அரளி, செவ்வந்தி, மதுரைமல்லி, ரோஜா, பூக்களின் விவசாயம் அதிக ஏக்கர் பரப்பில் செய்யப்பட்டது. இங்கு விளையக்கூடிய பூக்கள் தினமும் கம்பம், தேனி உள்ளிட்ட ஊர்களில் செயல்படும் மார்க்கெட்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பதினெட்டாம் கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் திறக்கப்படும்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பூக்கள் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டனர்.மழையும் கைகொடுத்தது. இப்போதோ மழை பெய்வது குறைந்துவிட்டது. இந்த வருடத்திற்கான (2019), மழை இன்னும் தொடங்கவில்லை. இயற்கையிலேயே மழைவளம் மிக குறைவான கோம்பை, தேவாரம், பொம்மிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைசேரி உள்ளிட்ட ஊர்களில் மழை இல்லை. இப்போது பூக்கள் விவசாயத்தின் பரப்பு பெருமளவில் குறைந்துவருகிறது.

மிக ஆர்வமாக ஈடுபட்ட விவசாயிகள் கூட தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயத்தை கைவிட தொடங்கியுள்ளனர். குறைந்தளவு தண்ணீரை நம்பி விதைத்தால் அவை கருகி விடுகின்றன. இதனால் நஷ்டமே ஏற்படுகிறது. எனவே விவசாயத்தை தொடர முடியாத சோகம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். விவசாயி ரங்கநாதன் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் விளையக்கூடிய பூக்கள் அதிகளவில் வெளிமார்க்கெட்களுக்கு மட்டும் அல்லாமல் உள்ளூர்களிலும் விற்பனையானது. கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயம் குறைந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் விவசாயத்திற்கு கிடைக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED கண்ணமங்கலம் அருகே உழவர் திருவிழாவில்...