×

குப்பை கிடங்காக மாறிவரும் வைகை ஆறு

பரமக்குடி, ஜூன் 19: பரமக்குடி வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை சரிசெய்யவேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். பரமக்குடி வைகை ஆறு பரமக்குடி நகர் பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கும் இடமாக மாறி வருகிறது. ஆனால் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீரை விடுவதும், பிளாஸ்டிக் பொருள்களின் கழிவுகளை வைகை ஆற்றுக்குள் கொட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், வியாபாரிகள் கடைகளில் உள்ள குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் வைகை ஆற்றின் காட்டுபரமக்குடி முதல் காக்காதோப்பு வரை கரையோரங்களில் கண்ட இடங்களில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகள் மழைபோல் குவிந்து காணப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை கடுமையாக தாக்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை திண்பதால் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து சமூக சேவகர் சாமுவேல் கூறியதாவது, பரமக்குடி நகர் பகுதியில் உள்ள குப்பைகளை நகராட்சி சேகரித்து குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றாலும், வைகை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் ஏரியாவாசிகளால் கொட்டப்படும் குப்பைகள் வைகை ஆற்றில் குவிந்து கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றார்.

Tags : Vaigai River ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு