×

வாகன சோதனையில் வியாபாரி பலி சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்

மதுரை, ஜூன் 19: போலீஸ் வாகன சோதனையில் டயர் வியாபாரி இறந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் வாகன சோதனையில் போலீசார் லத்தியால் அடித்ததில் டயர் வியாபாரி விவேகானந்த குமார் இறந்தார். இதைத்தொடர்ந்து கணவன் இறந்த துக்கத்தால் மனைவி கஜப்பிரியா தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இறந்த விவேகானந்த குமாரின் இறப்பால் அவருடைய மனைவி தற்கொலைக்கு முயலும் அளவுக்கு நடந்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துள்ளது. அவர் முழு சிகிச்சை பெற்று பூரணகுணமடைய வேண்டும். இது வேதனையான சம்பவம்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை வெளிவர வேண்டும். இதற்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து, அதனை வீடியோ எடுத்து, உண்மை நிலையை வெளியிட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி பதிவுகளை போலீசார் வெளியிட வேண்டும். அப்போதுதான் போலீசார் மீதான உண்மை தன்மையை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.  கோரிக்கை மனுவை தமிழக டிஜிபிக்கும், மதுரை போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பியுள்ளார்.

Tags : Dealer ,
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி