×

மதுரை காளவாசல் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு பதில் மாற்று இடத்தில் நடப்படுமா?

மதுரை, ஜூன் 19: மதுரை காளவாசல் பகுதியில் மேம்பால பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட அரசுத்துறை நேரம் பார்த்து வருகிறது. வெட்டாமல் புதிய தொழில்நுட்பம் மூலம் மாற்று இடத்தில் நடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை காளவாசல் பகுதியில் பைபாஸ் ரோட்டில் ரூ.51 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருவதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காளவாசல் பகுதியை கடந்து பழங்காநத்தத்தை நோக்கி செல்லும் பொன்மேனி, சம்மட்டிபுரம் பகுதி ரோட்டில் இருபுறமும் மரங்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 102 மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க இருக்கிறது. இதற்காக 102 மரங்களையும் வெட்டித்தள்ள நெடுஞ்சாலைத்துறை நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கிளைகளை வெட்டி சாய்த்தனர். இதற்கு அப்பகுதி மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். ஆனால் எப்படியும் வெட்டி விட வேண்டும் என்று அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர். இதனை வெட்டினால் தான் பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர். நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் மரங்கள் விரைவில் பலியாக காத்திருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘இந்த மரங்கள் மேம்பாலம் கட்ட இடையூறாக இல்லை. முழுமையாக வெட்டாமல் கிளைகளை வெட்டி விட்டு பணிகளை முடிக்கலாம். புதிய தொழில்நுட்பம் மூலம் மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட வேண்டும். அதை விடுத்து மரங்களை வெட்டுவது வீண் வேலை’’ என்றனர்.

Tags : area ,Madurai Kalaavasal ,
× RELATED வாட்டி வதைக்கும்...