×

போலி எம்பிசி சான்றிதழ் மதுரை பெண் துணை தாசில்தாரிடம் விசாரணை

மதுரை, ஜூன் 19: மதுரை மாவட்டத்தில் போலி எம்பிசி சாதிச்சான்றிதழ் வழங்கியது தொடர்பாக பெண் துணை தாசில்தாரிடம் விசாரணை நடத்த ஆர்டிஓவுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கரூர் மாவட்டம், தெலுங்கப்பட்டி,பொருந்தலூர் கிராமத்தை சேர்ந்த சங்கிலிமுத்து மதுரை கலெக்டர் சாந்தகுமாரிடம் புகார் மனு கொடுத்தார். அதில், ‘நான் தெலுங்கபட்டி செட்டி சாதியை சேர்ந்தவன். எங்கள் ஊரில் பிறந்த எங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தெலுங்கபட்டி செட்டி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசாணையில் உள்ளது. ஆனால், மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள துணை தாசில்தார் கவிதா, மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு பணம் பெற்றுக்கொண்டு தெலுங்கப்பட்டி செட்டி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றை வழங்கியுள்ளனர்.

இவர்கள் போலியாக கொடுத்த சான்றிதழால், உண்மையான எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மருத்துவம், பொறியியல், பட்டப்படிப்பு, படிப்புகளில் சேர முடியவில்லை. மேலும் வேலை வாய்ப்பும் பறிபோகும் நிலை உள்ளது. பெண் துணை தாசில்தார் கடந்த 6 மாதத்தில் தெலுங்கப்பட்டி செட்டி என்ற எம்பிசி சாதிச்சான்றிதழ் ஆன்லைன் மூலம் யார், யாருக்கு கொடுத்துள்ளார் என்பதை ஆய்வு செய்து, துணை தாசில்தார், புரோக்கர் ராஜேஷ் மீது விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துணை தாசில்தார் எங்கு பணியில் உள்ளார் என அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும் இதுபற்றி முழுமையாக விசாரித்து 10 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய மேலூர் ஆர்டிஓவுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags : Madurai ,MPC ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...