போதிய நீர் இல்லாததால் பாதியாக குறைந்தது பருத்தி விவசாயம் பழநி விவசாயிகள் கவலை

பழநி, ஜூன் 19: போதிய நீர் இல்லாததால் பழநி பகுதியில் பருத்தி விவசாய சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. பழநி கிழக்கு, வடக்கில் உள்ள கணக்கன்பட்டி, கோம்பைப் பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, காளிபட்டி ஆகிய ஊர்கள் கரிசல் நில பகுதிகளாகும். இப்பகுதிகளில் போதிய நீர் பாசன வசதிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவரி நிலமாகவும், கிணற்று பாசனத்தை நம்பி இருக்கும் நிலமாகவும் இருந்து வருகிறது. இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி உள்ளிட்டவை அதிகளவு பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது போதிய மழை இல்லாததாலும், கிணறு போன்றவைகளின் நீர் இருப்பு குறைந்து வருவதாலும் பருத்தி பயிரிடப்படும் பரப்பு வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை 150 ஹெக்டேராக இருந்து வந்த பருத்தியின் சாகுபடி பரப்பு இந்தாண்டு பெருமளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து கணக்கன்பட்டியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கதிரேசன் கூறியதாவது, பருத்தி ஒரு 150 நாள் பயிராகும். உரமிடுதல், பராமரித்தல் என அனைத்து விதமான பணிகளுக்கும் நீர்த்தேவை அவசியமாக உள்ளது. ஆனால் இந்தாண்டு போதிய மழை இல்லை. நிலவி வரும் கடும் வெப்பத்தின் காரணமாக கிணறுகளிலும் நீர் இருப்பு நன்கு குறைந்துள்ளது. போதிய நீரின்றி பயிர் செய்தால் பருத்தி பயிர் கருகி விடும். இதனால் மார்ச் துவங்க வேண்டிய கோடைகால பருத்தி பயிரிடலை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டுள்ளனர். இவ்வாறு கூறினார். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, ‘பழநி பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாகவே பருத்தி பயிரிடலின் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீர்ப்பற்றாக்குறையே முதன்மை காரணமாகும். திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் போதிய கிணற்று நீர் இல்லாத மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்னை சரிசெய்யப்படும். இவ்வாறு கூறினர்.Tags : cotton farmers ,
× RELATED கொடைக்கானலில் முன்விரோதத்தில் டாக்ஸி...