ராசிபுரம் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியது

ராசிபுரம், ஜூன் 19: ராசிபுரம் அருகே, ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் திரண்டதால், மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட கூனவேலம்பட்டி ஊராட்சி. இப்பகுதியில், 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 3 ரேஷன் கடைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதமாக ரேஷன் கடை பொது வினியோக திட்ட அரிசியை முறையாக பொதுமக்களுக்கு விற்பனையாளர்கள் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும், ரேஷன் அரிசி, இருப்பு இல்லை என கூறி, பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் இந்த ரேஷன் அரிசியை அங்குள்ள கோழிப்பண்ணைகளுக்கு திருட்டுத் தனமாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பாலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை சிலர் மூட்டை,மூட்டையாக கட்டி கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் இருட்டில் ஓடி மறைந்தனர். பின்னர் இது பற்றி ராசிபுரம் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகையில், கடந்த 3 மாதமாக பொதுமக்களுக்கு ரேஷன் அரிசியை வழங்காமல், கோழிப்பண்ணையாளர்களுக்கு திருட்டு தனமாக விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. என்றார்.

Tags : Rasipuram ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்