தர்மபுரி மாவட்டத்தில் நீர்வழித்தடங்களில் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு, கலெக்டர் மலர்விழியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, பொதுமக்கள் குடிநீருக்காக அன்றாடம் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் இல்லாமலும், தீவன தட்டுப்பாட்டாலும், கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வழித்தடங்கள் வீட்டு மனைகளுக்காகவும், பல்வேறு தனியார் மற்றும் அரசு உபயோகங்களுக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் கீழே, அபாயகரமான நிலைக்கு சென்று விட்டது.

 விவசாய கிணறுகள், போர்வெல் நீரின்றி வறண்டு, விவசாயம் பொய்த்து விட்டது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மாவட்டத்தில் வருவாய் துறை ஆவணங்களில் வரைபடத்திலுள்ள அனைத்து நீர்நிலைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள்  மற்றும் நீர்வழித்தடங்கள், நீர்வழிப்பாதைகள், கால்வாய்களை வருவாய்த்துறை மூலம் கண்டறிந்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : waterfalls ,Dharmapuri district ,
× RELATED குற்றால அருவிகளில் குளிக்க தடை