×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

ஏர்போர்ட், ஜூன் 20: திருச்சி விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்தவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு கோலாலம்பூர் செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அலி அப்பாஸ் என்பவர் தனது சூட்கேசை சோதனையிட்டபோது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய ரூபாய் நோட்டு மதிப்பில் ரூ.19,82,709 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால், யூரோ, ஜப்பான் என், ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், சுவிஸ் பிராங்க் என 374 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: தா.பேட்டை அருகே கண்ணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவள்ளி. கணவனை இழந்தவர். இவரது மகன் தமிழரசன். ராசிபுரம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சண்முகவள்ளி, கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது தமிழரசன் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாலிபரை சரமாரி தாக்கியவர் கைது: துறையூர் சிக்கத்தம்பூரை சேர்ந்தவர் சுதாகர்(32), விவசாயி. இவர் மணப்பாறை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது கேரளா செல்வதற்காக தஞ்சை மாவட்டம் பருத்திக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சாக்ரடீஸ்(32) அங்கு வந்தார். இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கேரளா செல்லும் ரயில் எப்போது வரும் என சாக்ரடீஸ், சுதாகரிடம் கேட்டார். அதற்கு அவர் ரயில் நிலையத்தில் என் என்கொயரியில் கேட்க கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சாக்ரடீஸ், சுதகாரை சரமாரியாக தாக்கினார். இதில் முகத்தில் காயமடைந்த சுதாகர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த கன்டோன்மென்ட் எஸ்ஐ அழகர், சாக்ரடீஸ்சை கைது செய்து விசாரித்து வருகிறார்.தர்மபுரி மாணவர் திருச்சியில் மாயம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சிடுவம்பட்டியை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரது மகன் முனிராஜ் (17). இதில் முனிராஜ், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சித்தி வீட்டில் தங்கியிருந்து பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகி மீண்டும் பள்ளி, கல்லூரி திறந்த நிலையில் பள்ளியில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் லேப்டாப் வாங்கி வருவதாக கூறி கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து முனிராஜ் புறப்பட்டு வந்தார். இரவு திருச்சி வந்த பின், பெற்றோருக்கு போன் செய்தார். திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக கூறியவர் அதன்பின் சித்தி வீட்டிற்கு செல்லவில்லை. மாறாக அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எங்கு தேடியும் காணாததால் தந்தை முத்து கன்டோன்மென்ட் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். எஸ்ஐ அழகர் வழக்குப்பதிந்து மாயமான முனிராஜை தேடி வருகிறார்.

தீயில் கருகி இளம்பெண் சாவு: திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் ராம்குமார். தஞ்சையில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கமலாதேவி (எ) அம்மாபொன்னு(28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. நான்கரை வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 11ம் தேதி கமலாதேவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.தவறி விழுந்து தொழிலாளி பலி: திருச்சி சிந்தாமணி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(46), தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.விஷம் குடித்து முதியவர் தற்கொலை: திருச்சி அருகே முத்தரசநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் மாணிக்கம்(51). இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி சத்திரம் பஸ்நிலையம் வந்த மாணிக்கம் விஷம் குடித்து மயங்கினார். அங்கிருந்த பயணிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணிக்கம் இறந்தார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தீயில் கருகி பெண் பலி: திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி மோகனா(22). இவர் 2016ம் ஆண்டு திருமணமான நிலையில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி குழந்தைக்கு கொடுக்க பால் காய்ச்சுவதற்கு அடுப்பை பற்ற வைக்கும்போது இவர் மீது மண்ணெண்ணெய் சிதறியது. தொடர்ந்து அடுப்பிலிருந்த தீ திடீரென இவர் மீது பற்றியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மோகனா இறந்தார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டே ஆனதால் ஆர்டிஓவால் தனி விசாரணை நடத்தப்பட்டது.மரத்தில் மோதி தொழிலாளி பலி: துவரங்குறிச்சி அருகே கள்ளக்காம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(28), கூலித் தொழிலாளி. நேற்று இவர் துவரங்குறிச்சியிலிருந்து பைக்கில் கள்ளக்காம்பட்டி வந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது: துறையூரை அடுத்த கோட்டத்தூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நேற்று துறையூரிலிருந்து ஊருக்கு பஸ் ஏறினார். அப்போது அதே பஸ்ஸில் ஏறிய வாலிபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் சில்மிஷம் செய்துள்ளார். இதை அந்த பெண் கண்டித்துள்ளார். இதற்கு அவர் தான் கீழக்குன்னுப்பட்டியில் இறங்குவதற்காக நிற்கிறேன் என்று என்று கூறி, அந்த ஊரில் இறங்காமல் வாலிபர் தன் பயணத்தை தொடர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கணவர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். இதையறிந்து பெண் உறவினர்கள் இறங்கும் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்று கொண்டிருந்தனர்.அந்த பெண் கோட்டாத்தூரில் இறங்கியபோது, வாலிபரும் இறங்கியுள்ளார் உடனடியாக பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிரசாந்த்(21) என்பதும், கீழகுன்னுப்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பின்னர அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.3 நாளாக நின்ற பைக்: மணப்பாறையில் 3 நாட்களாக அனாதையாக நின்ற பைக்கை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த கல்லாத்துப்பட்டியில் உள்ள முள்காட்டில் 3 நாட்களாக பைக் ஒன்று அனாதையாக நின்றிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : airport ,Trichy ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்