குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் குறித்து இன்று புகார் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன்19: குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் குறித்து மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்,குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி, உடல்நிலை, மருத்துவம், விடுதி சேர்க்கை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான புகார்கள் மற்றும் குறைகளை கேட்டு தீர்வு காணுதல் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழு அமர்வானது வருகிற 21ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இந்த குழு அமர்வில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளின் குறைகள் தொடர்பான புகார்களை கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கப்படும்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து வகையான புகார்கள் குறித்து நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இன்று (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம், திருக்கோகர்ணம் கல்யாணராபுரம் 1-ம் வீதியில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் என்ற முகவரிகளில் நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம்.மேலும் 21ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குழு அமர்வில் தங்களது குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நேரில் சென்றும் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி புஷ்பகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குழந்தைகளை பரிதவிக்கவிட்டு...