×

நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கூட்ட தொடரில் தீர்மானம்

காரைக்கால், ஜூன் 19: காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன செயற்குழு கூட்டம் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட நெடுங்காடு மற்றும் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதுபோல், காரைக்கால் நகராட்சி மற்றும் திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த மே மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காலத்தோடு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், குடும்பத்தை நடத்த கூட வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் மொத்த வருவாயையும் உள்ளாட்சித்துறையின் வருவாய் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காரைக்கால் பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதெனவும் முடிவு செய்துள்ளனர்.


Tags : meeting ,council ,panchayat employees ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்