×

கஜா புயலில் சேதமடைந்த நாகை உழவர் சந்தையை சீரமைப்பதில் மெத்தனம்

நாகை, ஜூன்19: கஜா புயலின் போது சேதமடைந்த நாகை உழவர் சந்தையை சீர் செய்யாமல் வேளாண் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக தென்னை, மா மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், நாலுவேதபதி, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை சிறப்பு பஸ்கள் மூலம் நாகை நகர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வைத்து இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தனர்.இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ததால் போதுமான அளவிற்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. நாகை உழவர் சந்தையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைவித்த கத்தரிக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், மாங்கனி, தேங்காய் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்தனர். இவ்வாறு எந்த நேரமும் கூட்டம் நிறைந்த நாகை உழவர் சந்தையை கஜா புயலின் போது சேதமடைந்தது. அவ்வாறு சேதமடைந்த உழவர் சந்தையை இதுவரை சீர்செய்யாமல் வேளாண் துறையை சேர்ந்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். உழவர் சந்தை மேற்கூரையின் மீது விழுந்த மரங்களை கூட அப்புறப்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

இதுகுறித்து அங்கு காய்கறிகள் விற்பனை செய்யும் சிலர் கூறியதாவது:கஜா புயலின் போது நாகை மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்தது. கடலோர கிராமங்களில் சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் குறுகிய கால பயிரான கீரை வகைள், காய்கறி வகைகளை பயிரிட்டு பிழப்பை நடத்தி வந்தோம். இதை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்வதற்காக உழவர் சந்தைக்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கஜா புயலின் போது சேதமடைந்த உழவர் சந்தையை சீர் செய்யாமல் வேளாண்துறை அதிகாரிகள் அலட்சியாக இருக்கின்றனர். கழிப்பிடம், குடிநீர் என்று எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் நீண்ட தூரங்களில் இருந்து காய்கறிகளை எடுத்து வந்தாலும் இங்கு வைத்து விற்பனை செய்ய இடமில்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.உழவர் சந்தையின் அவல நிலையை பார்த்து விட்டு வாங்க வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் இடத்தில் இருந்து 2 அல்து 3 பஸ்களில் ஏற்றி அதிக செலவு செய்து காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வர வேண்டிய அவலம் உள்ளது. எனவே உழவர் சந்தைக்கு என்று தனி அதிகாரிகள் நியமித்து, அலட்சியம் காட்டாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Nagage Farmers ,Ghazi Storm ,
× RELATED கஜா புயல் பாதிப்பு விவரங்களை...