×

வேளச்சேரி மேம்பாலம் அருகே ரயில்வே இடத்தில் கட்டப்பட்ட வீடு, கடைகள் இடித்து அகற்றம்: நலச்சங்க தலைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நலச்சங்கத்தினர்  தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கும், மேம்பால சர்வீஸ் சாலைக்கும் இடையே உள்ள 1.15 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கடந்த 2004ம் ஆண்டு ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கியது. தற்போது அந்த இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து  வீடு, கடைகள் மற்றும் வணிக வளாகம், டீக்கடை, ஓட்டல், விடுதிகள் என 400க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்டியுள்ளனர். இந்த கட்டிடங்களை காலி செய்யும்படி ரயில்வே துறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கடை உரிமையாளர்கள் கோர்ட்டில் தடை ஆணை பெற்று கடைகளை நடத்தி வந்தனர். இவ்வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை காலி செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை  யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அடையாறு போலீசார் உதவியுடன் வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள வீடு,  கடைகளை இடிக்க முயன்றனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தனஞ்செழியன் (66) என்பவர், திடீரென அங்கிருந்த  செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்துக்கு வந்து தற்கொலைக்கு முயன்ற தனஞ்செழியனை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து வீடுகள், கடைகள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

Tags : house ,railway place ,shops ,highway ,chapel ,Velachery ,head ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை