×

திருக்குறுங்குடியில் வாறுகால் அடைப்பால் தெருவில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்

களக்காடு, ஜூன் 19: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி  லெவஞ்சிபுரம் பள்ளிவாசல் தெருவில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற  பள்ளிவாசல் தெருவில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள  வீடுகளில் தேங்கும் கழிவு மற்றும் சாக்கடை நீர் இந்த வாறுகால் வழியாக  செல்கிறது. இந்நிலையில் இந்த வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் வாறுகால் நிரம்பி சாக்கடை மற்றும்  கழிவுநீர்கள் தெருவில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது  திருக்குறுங்குடி பகுதியில் சாரல் மழை தீவிரமடைந்து உள்ளதால் மழைநீரும்  சாக்கடை நீருடன் சேர்ந்து செல்கிறது. தெருவில் சாக்கடை நீர்  பெருக்கெடுப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

தெருவில் தேங்கி கிடக்கும் கழிவுகள் மற்றும் சாக்கடைக்குள் இறங்கித்தான்  பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. இதையடுத்து நோய்கள் பரவும்  அபாயமும் ஏற்பட்டுள்ளது. டூவீலர்களில் செல்வோர்கள் சாக்கடையில் சிக்கிக்  கொள்வதால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதியினர்  புகார் தெரிவிக்கின்றனர். எனவே திருக்குறுங்குடி பேரூராட்சி  நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை எடுத்து, வாறுகாலில் உள்ள அடைப்புகளை அகற்ற  வேண்டும் என்று நெல்லை மாவட்ட இந்திய கம்யூ. துணை செயலாளர் பெரும்படையார்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : street ,bridge ,Tirukurukundi ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...