×

குளத்தூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு

குளத்தூர், ஜூன் 19: குளத்தூர் அருகே பூசனூரில் நிலவும் குடிநீர்  தட்டுப்பாட்டால் அவதிப்படும் மக்கள், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம்  கோரிக்கை விடுத்தனர். குளத்தூர் அடுத்த பூசனூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம், கரிமூட்டம் வேலைக்கு சென்றுவருகின்றனர். மந்திக்குளம் கிராமத்தில் இருந்து கிடைக்கப்பெறும் நிலத்தடிநீர் சுத்திகரிக்கப்பட்டு பைப்லைன் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி தெருகுழாய்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சீவலப்பேரி கூட்டு குடிநீரும் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இங்கு நடந்த கோடைகால உழவு பணி துவக்க விழாவிற்கு வந்த கலெக்டர் சந்தீப் நந்தூரிடம்,  இதுகுறித்து பொதுமக்கள் முறையிட்டதோடு  சீராக குடிநீர்  வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடும் வறட்சியால் கடந்த ஒரு மாதமாக எங்களுக்கு குடிநீரும், நிலத்தடிநீரும் வழங்கப்படவில்லை. விளாத்திகுளம் செல்லும் சாலையோரம் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரு பைப்புகள் மூலமாக வரும் சீவலப்பேரி தண்ணீர் பைப்லைனை பூசனூரிலிருந்து த.சுப்பையாபுரம் செல்லும் சாலையின்  ஓரத்தில் கூடுதலாக ஒரு பைப் அமைத்து எங்களுக்கு சீராக வழங்க வேண்டும். மந்திக்குளத்திலிருந்து வரும் குடிநீர் குழாயில் அவ்வப்போது ஏற்படும் உடைப்புகளையும் உடனுக்குன் சரிசெய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Kuttur ,
× RELATED கூத்தூர் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி