×

ஆழ்துளை கிணறு அமைத்தும் மின் இணைப்பு வழங்கப்படாததால் 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு

விளாத்திகுளம், ஜூன் 19: விளாத்திகுளம் அருகே விருசம்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து 2 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் விளாத்திகுளம் தாலுகா, விருசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விருசம்பட்டி, மாமுநயினார்புரம் கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.  விருசம்பட்டி வைப்பாற்றில் கடந்த 2010ல் அமைக்கப்பட்ட ஆள்துளை வாயிலாக கிடைக்கப்பெற்ற குடிநீர் தற்போது முற்றிலும் உவர்ப்பாக மாறியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு ஊராட்சி பொது நிதியில் இருந்து விருசம்பட்டி கண்மாயில் ஒரு ஆழ்துளை கிணறும், இலந்தைகுளம் கிராமத்தில் மயானம் அருகே மற்றொரு ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின் இணைப்பு  வழங்கப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு இன்று வரை நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முன்னாள் பஞ். தலைவர் ராஜாக்கண்ணு தலைமையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.
அங்கு நடந்துவரும் ஜமாபந்தியில் பங்கேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இதுகுறித்து முறையிட்டு மனுக்கள் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட  கலெக்டர், விரைவில் மின் இணைப்பு கொடுத்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் நகர திமுக செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...