×

திருச்செந்தூரில் 15 நாட்களாக விநியோகம் பாதிப்பு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

திருச்செந்தூர்,  ஜூன் 19: வறட்சி பாதிப்பால் திருச்செந்தூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு நடந்துவருவதாக தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.  திருச்செந்தூரில் நிலவும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தும்பொருட்டு  தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ  பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று வருகைதந்தார். குடிநீர் பிரச்னையை  தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து செயல் அலுவலர் நாகராஜனிடம்  ஆலோசனை நடத்தினார். அப்போது கடும் வறட்சியால் குரங்கணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில்  நீராதாரம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் வைகுண்டம் தென்காலில் தண்ணீர் திறந்து விட்டால் பிரச்னைக்கு  தீர்வு கிடைக்கும் என செயல் அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், பொதுப்பணித்துறையினரிடம்  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். திருச்செந்தூர் பேரூராட்சி வணிக வளாக கடைகளை நடத்தி  வருபவர்களுக்கு பேரூராட்சி விதிகளின் படியே மீண்டும் கடைகள் வழங்க  வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.  தோப்பூர் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியை விரைந்து முடிக்க  வேண்டும். குமாரபுரத்தில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில்   கடந்த 15 நாட்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. சாலை, தெருவிளக்கு வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. பாதாள சாக்கடை திட்ட பணியும்  முறையாக நடக்கவில்லை. இவற்றுக்கு தீர்வுகாண பேரூராட்சி செயல் அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏற்கனவே இதுகுறித்து கனிமொழி எம்பியுடன் சென்று  கலெக்டரை சந்தித்து பேசியுள்ளேன். மீண்டும் கலெக்டரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தினேன். பேரூராட்சி  இயக்குநருடன் கலந்துபேசி தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார். இதே போல் குடிநீர் வடிகால் வாரியம்,  பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். இதனிடையே திருச்ெசந்தூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை  தீர்க்க லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குமாறு வலியுறுத்தினேன். அதன்படி லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றார். ஆய்வின் போது ஒன்றிய  திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், நகரச் செயலாளர் வாள் சுடலை, முன்னாள்  கவுன்சிலர்கள் செந்தில் ஆறுமுகம், கோமதி நாயகம், சுதாகர், ராஜ்மோகன், மாவட்ட  துணை அமைப்பாளர்கள் கிருபாகரன், பொன்முருகேசன், கலைசெல்வன், முன்னாள் நகரச்  செயலாளர் மந்திரமூர்த்தி, தோப்பூர் ஊர் தலைவர் நந்தகுமார், வணிக வளாக கடை  வியாபாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மக்களைத் திரட்டி போராட்டம்
 அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.  மேலும் கூறுகையில் ‘‘திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டம்  குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள்  குடிநீர் வடிகால் வாரியத்தையும் குறை சொல்லி வருகின்றனர். எனவே,  பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தவறினால் திமுக தலைவர்   மு.க. ஸ்டாலின் அனுமதியோடு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’  என்றார்.

Tags : Tiruchengore ,
× RELATED தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில்...