×

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி


* போக்குவரத்தில் அதிரடி மாற்றம் * இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

திருவண்ணாமலை, ஜூன் 19: திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், விழுப்புரம், திருக்கோவிலூர் சாலை வழியாக செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. எனவே, திண்டிவனம் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் வரை தற்போது விரிவடைந்திருப்பதால், காந்திநகர் பைபாஸ் சாலை இனிமேல் போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வேட்டவலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருச்சி வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேட்டவலம், விழுப்புரம் மற்றும் கீழ்பென்னாத்தூர், மங்கலம் வழியாக திருவண்ணாமலை வரும் அனைத்து வாகனங்களும், அவலூர்பேட்டை சாலை வழியாக திருவண்ணாமலைக்குள் அனுமதிக்கப்படும்.அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம், விழுப்புரம், கீழ்பென்னாத்தூர், மங்கலம் செல்லும் அனைத்து வாகனங்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலை வழியாக தீபம் நகர், அரசு மருத்துவக் கல்லூரி, புதிய பைபாஸ் சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மேலும், திருச்சி, திருக்கோவிலூர் சாலை வழியாக திருவண்ணாமலை வரும் வாகனங்கள் அனைத்தும், எடப்பாளையம் கிராமத்தில் இருந்து புதிய பைபாஸ் சாலையில் இடதுபுறமாக திரும்பி, மணலூர்பேட்டை சாலையை அடைந்து, அங்கிருந்து வலதுபுறமாக திரும்பி பழைய அரசு மருத்துவமனை, சண்முகா அரசுப்பள்ளி, அக்னி தீர்த்தம், பே கோபுரம் சாலை வழியாக பஸ் நிலையம் வரவேண்டும்.அதேபோல், இந்த வழித்தடங்களில் திருவண்ணாமலையில் இருந்து செல்லவும் இதே பாதையை பயன்படுத்த வேண்டும். இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Railway Bridge ,Thiruvannamalai-Tindivanam Road ,
× RELATED கொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நெரிசல்