×

பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

ஈரோடு, ஜூன் 19:  பிளஸ்-2 புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் 3 மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 பாடத்திட்டம் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நேற்று முதல் புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சி ஈரோட்டில் சிஎஸ்ஐ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், கலைமகள் கல்வி நிறுவனம், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையத்தில் நடந்தது. இதில், நேற்று நடந்த முதல் நாள் பயிற்சியில் ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, கணிதம், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. இதேபோல், நாளையும் இவர்களுக்கே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி அறிவியல் போன்ற 9 பாடங்களுக்கு ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.20ம் தேதி பெருந்துறை, கோபி, பவானி கல்வி மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, ஜூலை 4ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் பாட வாரியாக எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...