×

போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே கொலை முயற்சி கைதான 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, ஜூன்.19:கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதான 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்(27). இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் பிரதீப் கடந்த மாதம் 14ம் தேதி கோவை கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு தனது நண்பர் தமிழ்வாணன்(25) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வழிமறித்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தனர்.அவர்களை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியதாக கோவை கணபதி மூர் மார்க்கெட்டை சேர்ந்த சதீஷ்குமார்(25), மணிகண்டன்(27), சூர்யா(25), ஜெகதீஷ்(25), ஜேஷ்கண்ணா(21), ஹரிபிரசாத் (எ) திருட்டு கொசு(22), ஹரிஹரன்(25), தனபால்(26) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 8 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவு நகலை சரவணம்பட்டி போலீசார் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர். இதனையடுத்து 8 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags : police commissioner ,office ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...