×

பயிர் காப்பீடு தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜூன் 19:  திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை பெற  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 2019ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமானது அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் முகமையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. காரீப் பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, சோளம், எள்ளு ஆகிய வேளாண் பயிர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரையும், மா, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரையும், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பருத்திக்கு பயிர் காப்பீட்டு திட்ட தொகையில் 5 சதவீதம் பிரீமியம் தொகையும், இதர வேளாண்மை பயிர்களுக்கு 2 சதவீதம் பிரீமியம் தொகையும் செலுத்த வேண்டும். அதன்படி மக்காளச்சோளத்திற்கு ரூ.1319, பயறு வகை பயிர்களுக்கு ரூ.778, நிலக்கடலைக்கு ரூ.1359, சோளத்திற்கு ரூ.511, பருத்திக்கு ரூ.3 ஆயிரத்து 186, எள்ளுக்கு ரூ.615, தக்காளிக்கு ரூ.3 ஆயிரத்து 335, வெங்காயத்திற்கு ரூ.4 ஆயிரத்து 742, மஞ்சளுக்கு ரூ.9 ஆயிரத்து 102, வாழைக்கு ரூ.10 ஆயிரத்து 53, மரவள்ளிக்கு ரூ.3 ஆயிரத்து 730, மா பயிருக்கு ரூ.2 ஆயிரத்து 532 செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்ய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல், விதைப்பு சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்து, பயிர் காப்பீடு ரசீது பெற்று இடர்பாடு ஏற்படும் காலங்களில் உரிய காப்பீட்டு தொகை பெற்ற விவசாயிகள் பயன்பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்புகொள்ளவும். கூடுதலாக பயிர் காப்பீடு விவரங்களை தங்களது செல்போனில் உள்ள உழவர் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

Tags :
× RELATED பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் சாதனை