×

உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஆதரவற்ற மாணவிக்கு ‘பிறந்தநாள் பரிசு’

உடுமலை, ஜூன் 19: உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஆதரவற்ற ஏழை மாணவிக்கு பிறந்தநாள் பரிசாக பள்ளி உபகரணங்கள் மற்றும் புத்தாடையை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கினர்.உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 13ம்தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதன்படி நேற்று குறிச்சிகோட்டை, ஜல்லிபட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறுஞ்சேரி, பள்ளபாளையம்,  ஆலாம்பாளையம், தும்பலபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாவட்ட சமூக நல தனி ஆட்சியர் ராகவேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிலா, பார்வைத்திறன் குறைந்த தனது தந்தை ஜெயராமனுடன் வந்திருந்தார். அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், ‘எனது அப்பா முதியோர் ஓய்வூதியம் பெறுகிறார். இந்த வருமானத்தை வைத்துதான் நான் படிக்கிறேன். எனக்கு பள்ளியில் புத்தகம் கொடுத்துள்ளனர். ஆனால் நோட்புக் மற்றும் உபகரணங்கள் வாங்க பணம் இல்லை. இதற்கு உதவி செய்ய வேண்டும். விரைவில் எனது பிறந்தநாள் வருகிறது. அதை கொண்டாட ஆசையாக உள்ளது’ என கூறினார்.

இதைக்கேட்ட வட்டாட்சியர்கள் தங்கவேலு, தயானந்தன், கிருஷ்ணவேணி ,துணை வட்டாட்சியர்கள் பொன்ராஜ், கிருஷ்ணவேணி மற்றும் அலுவலுக பணியாளர்கள் வருவாய்த்துறையினர் தங்கள் சொந்த பணத்தில் ஸ்கூல்பேக், நோட்புக், பேனா, பென்சில் வகைகள், புதிய காலணி, பிறந்தநாளுக்கு புத்தாடை என ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அரை மணி நேரத்தில் வாங்கினர். இதை தனி ஆட்சியர் ராகவேந்திரன், மாணவி நிலாவிடம் வழங்கினார். மாணவியும், தந்தையும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். கோரிக்கை ஏற்று உடனடியாக பரிசளித்த வருவாய்த்துறை அதிகாரிகளின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். தொடர்ந்து இன்று (19ம்தேதி) தளி 1 மற்றும் 2, போகி கவுண்டன் தாசர் பட்டி, குரல்குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டி கவுண்டனூர் 1 மற்றும் 2, மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும், நாளை வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம்,  சின்னப்பம்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலேப்பநாயக்கன் பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

Tags : student ,Udumalai ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...