×

மயிலம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்

மயிலம், ஜூன் 19: மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னைகளை சரி செய்யகோரி மாசிலாமணி எம்எல்ஏ விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டதின் காரணமாக குடிநீர் பிரச்னை மாவட்டத்தில் பல ஊர்களில் ஏற்பட்டுள்ளது. இதுபோல் மயிலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்னையை போக்க கடந்த பிப்ரவரி 4ம் தேதி ஊராட்சிகளிலுள்ள உபரிநிதி மூலம் 92 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதுபோன்று ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மூலம் 15 பணிகளுக்கு ரூ.58 லட்சத்து 85 ஆயிரத்திற்கு பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்படாத நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் விசாரித்து இந்த பணிகளை துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மயிலம் தொகுதியில் வறட்சியை போக்கிட புதிதாக திறந்த வெளி கிணறுகள், புதிய ஆழ்துளை கிணறுகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலம் அடுத்த நெடி கிராமத்தில் கடந்த ஆண்டு வறட்சி நிவாரணம் மூலம் புதிய கிணறு வெட்டப்பட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுபோல பேரணி கிராமத்தில் தாய் திட்டம் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட குடிநீர் கிணறும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டும் என கூறியுள்ளார்.





Tags : constituency ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...