×

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் மறியல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 19: கள்ளக்குறிச்சி அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தில் உள்ள போயர் தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்
பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பைப் லைன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீரின்றி அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 பள்ளி மாணவர்கள் குளிக்க முடியாமல் பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் அத்யாவசிய தேவைக்காக வெகுதூரத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது.  

இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்ைத கண்டித்து நேற்று காலைதென்கீரனூர் பேருந்து நிறுத்தத்தில் திரண்டனர். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தை காலி குடங்களுடன் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்ைத கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளிக்கு தாமதமாக செல்வதாக மாணவி வேதனைதென்கீரனூர்  கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி தர்ஷினி கூறுகையில், இந்த கிராம குடியிருப்பு  பகுதியில் மினி டேங்க் பெயரளவிற்கு தான் உள்ளது. தண்ணீர் வருவதில்லை.  தொடர்ந்து வரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் குளிக்க முடியாமல் பள்ளிக்கு செல்ல  வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனது தாய் விவசாய  கிணற்று பகுதிக்கு வெகுதூரம் சென்று தண்ணீர் எடுக்க சென்று வருவதால்  சமைப்பதற்கு நேரம் ஆகி விடுகிறது. இதனால் நான் பள்ளிக்கு குறிப்பிட்ட  நேரத்திற்கு செல்ல முடியாமல் காலதாமதமாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக  வேதனையுடன் தெரிவித்தார்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...