×

குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை

விருத்தாசலம், ஜூன் 19:  கருவேப்பிலங்குறிச்சி அருகே சத்தியவாடி ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலம்-தொழுதூர் நெடுஞ்சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால், சத்தியவாடியில் நெடுஞ்சாலை அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால் சாலையோரங்களில் உள்ள 50 குடும்பங்களை காலி செய்ய பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் வரும் 20ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் காலி செய்துவிட்டு வெளியேறுமாறும், காலி செய்யாவிட்டால் வீடுகள் இடித்து தள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையன்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தனர்.

 இந்நிலையில் பொதுமக்களிடம் நேற்று சார் ஆட்சியர் பிரசாந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பெண்ணாடம் அருகே மாளிகைகோட்டம், நந்தப்பாடி ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டு அதில் முகாந்திரம் ஏற்பட்டால் அங்கு மாற்று இடம் வழங்கப்படும் என கூறினார். இதையடுத்து பொதுமக்கள் சமாதானமடைந்து சென்றனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் நீதிவள்ளல், தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Sir Collector ,public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...