மாலுமி பணியில் சேர மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி

கடலூர், ஜூன் 19:   கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவ இளைஞர்கள் இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவற்படையின் மாலுமி பணிகளில் சேருவதற்கான வழிகாட்டு சிறப்பு பயிற்சி மூன்று மாத காலங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 50 மீனவ இளைஞர்கள் அடங்கிய 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள வாரிசுதாரர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.மீன்வளத்துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு சீருடை, காலணி, எழுதுபொருட்கள், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.
ஆண்டுக்கு இருமுறை (மார்ச், செப்டம்பர்) நடைபெறும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல் படை தேர்வுகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட  மாலுமி மற்றும் செய்லர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியில் சேர மீனவ இளைஞர்கள் உடற் தகுதி பெற்றிருந்தும், எழுத்து தேர்வில் பயிற்சிகள் குறைவாக இருப்பதால் தேர்வில் தோல்வி அடைகின்றனர். இதற்காக அவர்களுக்கு 3 மாத கால சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.  இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள்   கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று  பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் வரும் 28ம் தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குநர், கடலூர், கடலூர் மீன்பிடி துறைமுக வளாகம், கடலூர் முதுநகர்- 607003 என்ற முகவரிக்கு  நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

× RELATED இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை