வடக்குத்து ஊராட்சியில் தொடர் மின்வெட்டு

நெய்வேலி, ஜூன் 19:  வடக்குத்து ஊராட்சி நகர் பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் பி.டி.ஆர் நகர், எஸ்.பி.டி மணி நகர், சக்தி நகர், தில்லை நகர், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர்கள், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வசிது வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளில் சமீபகாலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் குறைந்தது நான்கு முறையாவது மின்வெட்டு தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

 மேலும் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் வீட்டில் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். இதுகுறித்து மேற்கண்ட பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தால் முறையான பதில் அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும்போது மின்வாரிய அலுவலர் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. எனவே இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : panchayat ,
× RELATED மின்தடை