×

மாவட்டம் நூறு நாள் வேலை செய்ய 8 கி.மீ செல்லும் பெண்கள்

விருதுநகர், ஜூன் 18: சாத்தூர் அருகே உள்ள சி.கலிங்கப்பட்டி கிராம பெண்கள் நூறு நாள் வேலை செய்ய 8 கி.மீ தூரம் சென்று வருகின்றனர். எனவே, சொந்த கிராமத்திலேயே வேலை வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், சிந்தையம்பட்டி ஊராட்சியில் உள்ள சி.கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சாத்தூர் அருகே உள்ள சிந்தையம்பட்டி ஊராட்சியில் சி.கலிங்கபட்டி, லிங்கம்பட்டி, நாருகாபுரம், அய்யம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், சி.கலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நூறு நாள் வேலைக்கு பதிவு செய்து, கடந்த 5 ஆண்டுகளாக 8 கி.மீ தூரம் உள்ள அய்யம்பட்டி கிராமத்திற்கு சென்று வேலை செய்ய நிர்பந்தம் செய்கின்றனர்.

மேலும், 8 கி.மீ தூரம் பெண்கள் கருவேல் முட்புதர்கள் வழியாக வேலைக்கு போய் வர வேண்டிய நிலை உள்ளது. சி.கலிங்கபட்டி கிராமத்தில் குருசாங்குளம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்கள் உள்ளன. இவற்றில் நூறுநாள் வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யாமல் 8 கி.மீ தூரம் உள்ள அய்யம்பட்டிக்கு அலைய விடுகின்றனர். இதற்கு காரணமாக உள்ள ஊராட்சி ‘கிளாக்’ மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சி. கலிங்கப்பட்டி கிராமத்திலேயே நூறு நாள் வேலை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : girls ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே