×

திருத்தங்கல்லில் அதிகரிக்கும் சாலையோர ஆக்கிரமிப்பு

சிவகாசி, ஜூன் 18: சிவகாசி அருகே, திருத்தங்கல் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி அருகே, திருத்தங்கல் நகராட்சி உள்ளது. சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த ஊர் வழியாக சென்று வருகின்றன. திருத்தங்கல்லில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மெயின் ரோட்டில் கடும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வாகனங்கள், ஆயிரக்கணக்கான டூவீலர்கள் தினமும் இருமார்க்கமாக சென்று வருகின்றன. இதனால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை அகலப்படுத்தப் படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், விபத்து நடப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் திருத்தங்கல் நுழைவு பகுதியில் ரயில்வே கேட் உள்ளதால் ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரும் நெருக்கடியில் இந்த சாலை சிக்கி தவிக்கிறது. சாலைக்கேற்ற வகையில் வாகன ஓட்டிகளும் மெதுவாக செல்வது கிடையாது. வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முயல்வதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

சாலையில் செட் அமைத்து கடைகள் வைத்துள்ளனர். மேலும் சிலர் தங்களது விளம்பர போர்டுகளை சாலையில் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களின் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்து கொடுக்கப்படாததால், சாலையில், அவர்கள் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். அதனால், பீக் ஹவர்ஸில்’ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படுகிறது. சாலையோரஙகளில் குவிந்து கிடக்கும் மணலால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைகின்றனர். சாலையை போர்க்கால அடிப்படையில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மண்களை அகற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Edinburgh ,
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...