×

மாவட்டம் சுருளிப்பட்டி பகுதியில் உடையும் அபாயத்தில் மிரட்டும் ஆற்றின் கரை

கம்பம், ஜூன் 18: சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரை உடையும் அபாயத்தில் உள்ளது. இக்கால்வாய் கரை உடையும் பட்சத்தில் உத்தமபாளையம் பி.டி.ஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்க்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முல்லைப்பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரானது சுரங்கப்பாதையின் வழியாக போர்பை டேம் கொண்டுவரப்பட்டு, பின் ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், இறைச்சல்பாலம் வழியாகவும் லோயர்கேம்ப் முல்லை ஆற்றில் சேர்ந்து, ஆற்று வழித்தடத்தின் வழியே வைகை அணைக்கு செல்கிறது. ஆற்றில் வரும் இத் தண்ணீரை மதகுகள் அமைத்து கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 1985ல் தேசிய ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதிப்பாடு திட்டத்தில், சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு மணப்படுகை பகுதி அருகே மதகு அமைக்கப்பட்டது. இத்தலைமதகில் இருந்து சீலையம்பட்டி வரையில் பாளையம் பரவு வாய்கால் செல்கிறது. பரவு கால்வாயை இரண்டாகப்பிரித்து பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் தண்ணீர் மூலம் சுமார் 5,146 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு வாய்கால்களுக்கு தண்ணீர் செல்லும் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரைகள் பல ஆண்டுகளாக பலப்படுத்ததால் உள்ளது. மேலும் இப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் தலைமதகு அருகே மணப்படுகை பகுதியில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இப்பகுதியில் டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லக்கூடிய ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரையானது ஆட்கள் நடமாடும் அளவில் மிகவும் குறுகி சேதமடைந்து உடையும் அபாயத்தில் உள்ளது. கரை உடைந்தால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், பாளையம் பரவு வாய்கால், பிடிஆர் கால்வாய், தந்தை பெரியாறு கால்வாய்க்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகிவிடும். ஆனால், பலமாதங்களாக இந்த கரை சேதமடைந்தும் அதை சரிசெய்ய பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இனியும் மெத்தனமாக இருக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shore ,river ,district ,area ,Sulipipatti ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...