×

உத்தமபாளையம் வட்டாரத்தில் பெயரளவில் நடந்த பிளாஸ்டிக் ரெய்டு

உத்தமபாளையம், ஜூன் 18: உத்தமபாளையம் வட்டாரத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்படும் பெயரளவு ரெய்டு மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. ஆளுங்கட்சியினர் நடத்தக்கூடிய பார்களில் தாராளமாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை சுகாதாரத்துறை கண்டு கொள்வதில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது.உத்தமபாளையம் வட்டாரத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கடந்த 1 வாரமாக சுகாதாரத்துறை சார்பில் பிளாஸ்டிக் ரெய்டு நடத்தப்படுகிறது. கடைகள், ஹோட்டல்கள், பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகளில் புகுந்து சுகாதார மேற்பார்வையாளர், 3 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி ரெய்டு நடத்தப்படுகிறது.

இந்த ரெய்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக ரூ.500 முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வரவேற்கதக்கதாக இருந்தாலும், மறுபுறம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. குறிப்பாக உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் இயங்கும் டாஸ்மாக் கடையில் அனுமதியே பெறாமல் அதிமுகவினர் பார் நடத்தி வருகின்றனர். இங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், தண்ணீர்பாக்கெட், பிளாஸ்டிக் தட்டுகள், இலைகள் பயன்படுத்தப்பட்டு பக்கத்தில் உள்ள விளைநிலங்களில் கொட்டப்படுகிறது. இதேபோல் தேவாரம் அரசு டாஸ்மாக் கடை, அனுமந்தன்பட்டி - ராணிமங்கம்மாள் சாலை டாஸ்மாக் கடை, ஆனைமலையன்பட்டி - சின்னஓவுலாபுரம் சாலை டாஸ்மாக் கடை போன்றவற்றில் அதிமுகவினர் நடத்தும் ஏலம் விடப்படாத பார்களில் முறைகேடாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இங்கெல்லாம் புகார்கள் சென்றாலும் சுகாதாரத்துறை சார்பில் எந்த ரெய்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக பெட்டிக்கடைகளை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்துவதும், பிளாஸ்டிக் பிடிபட்டதாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவதும் தொடர்கதையாகி வருகிறது. இது வியாபாரிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

Tags : nomadapalayam region ,
× RELATED பெரியகுளம் அருகே நீர் வரத்தால் அழகான எலிவால் அருவி